×

மாவட்டத்திலேயே 255 மாணவர்கள் சேர்த்து சாதனை படைத்து கூடுதல் வகுப்பறை இல்லாததால் கோயிலில் செயல்படும் ஆரம்பப்பள்ளி

மதுராந்தகம், நவ. 20: கருங்குழி பேரூராட்சி மேலவலம்பேட்டை அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பாடம் நடத்தப்படுகிறது. மாவட்டத்திலேயே 255 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த பள்ளிக்கு ஏன் இந்த அவலம் என சமூக ஆர்வலகர்கள் கூறுகின்றனர். இதனால், கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பள்ளி கல்வித்துறையிடம் வலியுறுத்தப்படுகிறது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி மேலவலம்பேட்டையில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 255 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே ஆரம்ப பள்ளியில் அதிக மாணவ, மாணவிகளை சேர்ந்து இப்பள்ளி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் வகுப்பறைகள் இல்லை. இந்த பள்ளியில், 4 வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில், 2 வகுப்பறைகள் சமீபத்தில் மதுராந்தகம் திமுக எம்எல்ஏ புகழேந்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. தற்போது, இந்த 4 வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். ஆனாலும் இடநெருக்கடியால், பள்ளியின் அருகே உள்ள கோயில் வளாகம், பள்ளிக்கான சமையல் கூடம் ஆகிய பகுதிகளில் மாணவர்களை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்கள் பாடத்தை கவனிக்காமல் வெளிப்பகுதியை வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களது கல்வி அறிவு திரும்பும்படி உள்ளது. இதனால், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

இந்த பள்ளியை நம்பி தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் இடநெருக்கடி இல்லாத வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகளை, தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை கட்டி தரவேண்டும் என வலியுறுத்துகின்றனர். தற்போது, தனியார் பள்ளிகளை நோக்கி தங்களது பிள்ளை சேர்ப்பதால், அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர்கள், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டிடங்களை அரசு கட்டி தரவேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags : district ,classroom ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...