×

ஆந்திராவில் தப்பிய சென்னை ரவுடி கோவளத்தில் சுற்றி வளைத்து கைது

சென்னை, நவ.20 : ஆந்திராவில் இருந்து தப்பிய சென்னை ரவுடியை போலீசார் கோவளத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது ரவுடி தாக்கியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு என்கிற பல்சர் பாபு (30). இவர் மீது சென்னை ஏழு கிணறு மற்றும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, புத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற கொள்ளை வழக்கு ஒன்றில் பாபுவை பிடித்த புத்தூர் போலீசார், அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடமிருந்து பாபு தப்பித்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் புத்தூர் போலீசார் அவரை பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில், அவரது செல்போன் சிக்னல் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை போலீசார் மூலம் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த தலைமைக்காவலர் சுதர்சன் என்பவர் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு கோவளம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது பாபு என்கிற பல்சர் பாபு தனது பைக்கில் வந்தார்.

போலீசாரின் சோதனையைப் பார்த்ததும் அவர் வண்டியை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து தலைமைக்காவலர் சுதர்சன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது கையில் இருந்த தகடு போன்ற பொருளால் இருவரையும் பாபு தாக்கினார்.
இதில் ராஜேஷ் கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேலும், தலைமைக்காவலர் சுதர்சனை தனது பல்லால் கடித்தார். இருப்பினும் இருவரும் விடாமல் போராடி பாபுவை பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தலைமைக் காவலர் சுதர்சன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை தாக்க முயன்றதாக பாபு என்கிற பல்சர் பாபு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே பாபுவை தேடி வந்த ஆந்திர போலீசார் பாபு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் திரும்பிச் சென்றனர்.

Tags : Chennai Rowdy ,Andhra ,
× RELATED திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு...