குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு : மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை : குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சென்னையில் உள்ள அங்கன்வாடி மையங்கள் சீரமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி கற்கும் முறை, கல்வி கற்பிக்கும் முறை ஆகியவற்றை மாற்றியமைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ₹100 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதைத்தவிர்த்து மாண்டிசோரி கல்விமுறையை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்டுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்கும் பணியை மாநகராட்சி விரைவில் தொடங்கவுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1086 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் 20 முதல் 25 சிறுவர்கள் வரை பயின்று வருகின்றனர். அதன்படி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அங்கன்வாடி மையங்களில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஊட்டசத்து உணவு, மதிய உணவு உள்ளிட் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து மத்திய அரசின் போசன் அபியான் திட்டமும் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 5  வயது வரையுள்ள குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்து வழங்குவது, குறிப்பாக  வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகள் மற்றும் எடைக்கு ஏற்ற உயரம் இல்லால் இருக்கும் குழந்தைகளை  கண்டறிந்து அவர்களுக்கு உரிய  ஊட்டச் சத்து வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அங்கன்வாடி மையங்களை மறுசீரமைப்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மாநகராட்சி நடத்தி வருகிறது. பொறியாளர்கள் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆராய்ந்து என்ெனன்ன வசதிகள் தேவை என்பது தொடர்பாக அறிக்கை சமர்பிப்பார்கள். இந்த அறிக்கையின்படி மறுசீரமைப்பு பணி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: புதிதாக அங்கன்வாடி மையங்கள் அமைப்பது மற்றும் ஏற்கனவே உள்ள மையங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக 8க்கும் மேற்பட்ட கட்டமைப்பு வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இடத்தின் அளவை பொறுத்து இந்த கட்டமைப்பு உறுதி செய்யப்படும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தங்களின் நிதியில் அங்கன்வாடி மையங்களை சீரமைக்க விரும்பினால் அதன் வடிவத்தை அவர்களே  தேர்வு செய்யலாம். இதன் மூலம் அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மையங்களாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: