×

தாயுடன் கள்ளக்காதலை துண்டிக்காததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை : மகன் உட்பட 5 பேர் கைது

புழல், நவ.20: ரெட்டேரி அருகே தாயுடன் கள்ளக்காதலை துண்டிக்காததால் ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் சந்திப்பில், யூனியன் வங்கி அருகே, நேற்று முன்தினம் இரவு, ஒரு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. அதனுள் ஆட்டோ டிரைவர், ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர், ஆட்டோ டிரைவருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால், 5 பேரும் அங்கிருந்து தப்பினர். பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, ஆட்டோ டிரைவர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், கொலை செய்யப்பட்டவர் கொளத்தூர் கண்ணகி நகர் ஏரிக்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்வர் பாட்ஷா (31) என்பது தெரியவந்தது.
இவரது மனைவி பர்வீன். தம்பதிக்கு முகமது தயன் என்ற மகனும், முத்ராக் என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பர்வீன் தனது கணவரை பிரிந்து, மகன் மற்றும் மகளுடன் புளியந்தோப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அன்வர் பாட்ஷாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் மனைவி லட்சுமி (34) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த லட்சுமியின் குடும்பத்தினர் அவரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், இவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், ரெட்டேரி சிக்னல் பகுதியில், ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் லட்சுமியும், அன்வர் பாட்ஷாவும் பேசிக்கொண்டு இருந்தனர்.  இதுபற்றி அறிந்த லட்சுமியின் மகன் அஜித், தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்து அன்வர் பாட்ஷாவை வெட்டி கொன்றது தெரிய வந்தது.

இந்நிலையில், சோழவரம் பகுதியில் பதுங்கி இருந்த லட்சுமியின் மகன் அஜித் (21), விநாயகபுரத்தை சேர்ந்த அஸ்வின் (22), லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக் (22), திருவள்ளுவர் நகர் கடப்பா சாலை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (20), கதிர்வேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

மண்ணடி கிளைவ் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் வடிவேந்திரன் (36). இவர் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், வடிவேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த வடிவேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

Tags : drivers ,auto driver ,
× RELATED கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது