ஆத்தூர் அருகே இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல்

ஆத்தூர், நவ.20: ஆத்தூர் அருகே, டூவீலரில் சென்ற இளைஞர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி(31), பாண்டியன்(20), சஞ்சய்(18), அரவிந்தன்(21) மற்றும் மாதவன்(19) ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை கல்பகனூரில் இருந்து ஆத்தூருக்கு 2 டூவீலர்களில் ஜயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான பூஜை பொருட்களை வாங்க வந்தனர். மாலை பொருட்களை வாங்கிக் கொண்டு கல்பகனூருக்கு புறப்படும் போது ஒரு டூவீலரில் பெட்ரோல் இல்லாததால் தெரிந்தவர் வசம் ஒரு வண்டி மற்றும் பொருட்களை வைத்து விட்டு ஒரே வாகனத்தில் 5 பேரும் கல்பகனூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். விநாயகபுரம் பகுதியில் சென்றபோது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் டவுன் காவல்நிலைய போலீஸ்காரர்களான சிவகுரு மற்றும் ஷபியுல்லா, அலாவூதீன் ஆகியோர் இளைஞர்களை தடுத்து நிறுத்தி ஒரே வண்டியில் 5 பேர் வந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, இளைஞர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்,ஆத்திரமடைந்த போலீசார் இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில், 5 பேரும் காயமடைந்தனர். இதனையடுத்து அரவிந்தனின் வாகனத்தையும் பறிமுதல் செய்து, நேற்று முன்தினம் காலையில் 5 பேரும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என கூறி எழுதி வாங்கிக் கொண்டு கல்பகனூருக்கு அனுப்பி வைத்தனர்.  

அதனைத்தொடர்ந்து இளைஞர்கள் தங்களை போலீசார் தாக்கியது குறித்து வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பச்சமுத்து, பாமக மாவட்ட செயலாளர் நடராஜ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நேற்று காலை பாமக மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் கண்ணன், நகர பாமக செயலாளர் மணிகண்டன், இளஞ்செழியன், கல்பகனூர் செந்தில், பொன்மலை உள்ளிட்ட பாமகவினர் போலீசாரால் தாக்கபட்ட இளைஞர்களை அழைத்துக் கொண்டு ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பாமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இளைஞர்களை தாக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.  இதன்பேரில், முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: