2ம் நிலை காவலர் பணி உடல் திறன் தேர்வில் 648 பேர் தேர்ச்சி

சேலம், நவ.20: 2ம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வில் 648 இளைஞர்கள் அடுத்தநிலைக்கு தேர்ச்சி பெற்றனர். 142 பேர் வெளியேற்றப்பட்டனர்.தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலம் முழுவதும் 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்வர்கள் கலந்துகொண்டனர். கடந்த 6,7, 8ம் தேதிகளிலும், நேற்று முன்தினமும் நடந்த உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக உடல்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக 800 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 790 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை சரக டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். சூப்பர்செக் ஆபீசரான மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், தேர்வு சரியாக நடக்கிறதா என ஆய்வு செய்தார். கயிறு ஏறுதலில் மிக அதிகப்படியாக 116 இளைஞர்கள் தோல்வியை தழுவி, வெளியேற்றப்பட்டனர். ஓட்டத்தில் 26 பேர் தோல்வியடைந்து வெளியேறினர். இதன்மூலம் நேற்றைய தேர்வில் 648 பேர் அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்றனர். இன்றும்(20ம்தேதி) இளைஞர்களுக்கு உடல்திறன் தேர்வு நடக்கவுள்ளது.

ஏற்காடு இளைஞர் கால் முறிவு ஏற்காடு வேலூர் கொண்டையனூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜா, காவலர் தேர்வில் பங்கேற்றார். உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், நேற்றைய தினம் உடல்திறன் தேர்வில் பங்கேற்றார். கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்றவற்றில் வெற்றி பெற்ற அவர், 400 மீட்டர் ஓட்டத்தை தேர்வு செய்து பங்கேற்றார். 300 மீட்டர் தூரத்தை கடந்து வந்தநிலையில், திடீரென கீழே சரிந்து விழுந்தார். போலீசார் அவரை தூக்கியபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ராஜா, விளையாடும் போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்துடன் தேர்வில் பங்கேற்று ஓடியபோது, முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஓட்டத்தில் 400 மீட்டர் தூரத்தை கடக்காததால், அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார்.

Related Stories: