×

வத்தல்மலைக்கு வெளிநபர்கள் செல்ல தடை

தர்மபுரி, நவ.20: தர்மபுரி வத்தல்மலைக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதித்து, வனப்பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தர்மபுரி வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளினூர் உள்ளிட்ட 8 மலைக்கிராமங்கள் உள்ளன. 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. இதில், 23 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய விளை பொருட்களை தர்மபுரி, சேலம் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் சிறிய பயணிகள் வாகனங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது வத்தல் மலை பகுதியில் கனமழை கொட்டியது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. வத்தல்மலை பகுதியில் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. இதனால் வத்தல் மலை அடிவாரத்தில் தண்ணீர் வரத்து உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வத்தல்மலைக்கு வெளிநபர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வத்தல்மலை கிராம மக்கள், உறவினர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வத்தல்மலை இயற்கையை சுற்றிபார்க்க வெளிநபர்கள் சென்றால், தெரிந்தநபர்களின் பரிந்துரை அவசியம் தேவைப்படுகிறது. வனத்துறையினருக்கும் தெரிந்தநபர்களாக இருந்தால் மட்டுமே, அந்த சிபாரிசை ஏற்றுக்கொண்ட பின்னர், வத்தல்மலை வனப்பகுதியை சுற்றி பார்க்க அனுமதி அளிக்கின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வத்தல்மலையின் இயற்கை அழகை ரசிக்க சென்றால், வனத்துறையினர் அனுமதி அளிப்பதில்லை. சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்துவிடுகின்றனர். தெரிந்தநபர்கள் கூறினால் மட்டுமே வத்தல்மலைக்கு செல்ல அனுமதி அளிக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் பலர் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.  
இதுகுறித்து தர்மபுரி வனச்சரகர் கமலநாதன் கூறுகையில், வத்தல்மலைக்கு சுற்றுலா பயணிகள் தினசரி நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வருகின்றனர். வரும் நபர்களில் பலர் இளம் பெண்களை அழைத்துக்கொண்டும், மது பானங்களை எடுத்துக்கொண்டும் வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகின்றனர். இதை தடுக்கவும், வத்தல்மலை காப்புக்காடு பகுதியை, தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை.  இயற்கையை ரசிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தால், தெரிந்தநபர்களின் சிபாரிசு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கிறோம். இல்லையென்றால் அனுமதி அளிப்பதில்லை. மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் பணியில் அமர்த்தி, வனத்தின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தெரியாத வெளிநபர்கள் செல்ல அனுமதி கிடையாது. வத்தல்மலைக் கிராமமக்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வந்து செல்கின்றனர் என்றனர்.

Tags : Foreigners ,Waththamalai ,
× RELATED பரங்கிமலை ராணுவ மையத்தில் 245 இளம்...