×

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ₹23.50 லட்சம் உதவி

தர்மபுரி, நவ.20:  தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 94 பேருக்கு ₹23.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தில், சமூக நலத்துறை மூலம் அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கல்வியை மேம்படுத்துதல், பெண் சிசுக் கொலையை ஒழித்தல், ஆண் குழந்தையை விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்துதல், சிறு குடும்ப நெறியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தைத் தடுத்தல் போன்றவை ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற திருமணத்தின் போது பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெற்றோருக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கடைசி குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் மனு அளித்தல் வேண்டும். வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும். பெண் மற்றும் ஆணுக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத் திட்டத்தில் ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன், தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ₹50 ஆயிரம் அரசால் முதலீடு செய்யப்படும். அதேபோல் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இருக்குழந்தையின் பெயரிலும் தலா ₹25 ஆயிரம் வீதம் முதலீடு செய்யப்படும். ஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ₹25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.

இத்திட்டத்தில் பதிவு செய்ய குழந்தைகளின் பிறப்பு சான்றுகள், வருமான சான்று (ஆண்டு வருமானம் ₹72 ஆயிரம்), இருப்பிட சான்று, ஜாதி சான்று, குடும்ப அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லா சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில், இத்திட்டத்தில், நடப்பாண்டில்(2019) அக்டோபர் மாதம் வரை 94 பயனாளிகளுக்கு ₹23 லட்சத்து 50 ஆயிரம் உள்பட கடந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 2,859 பயனாளிகளுக்கு ₹7 கோடியே 14 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri District ,
× RELATED திமுக எம்எல்ஏ நிவாரண உதவி