×

அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி

தர்மபுரி, நவ.20:  தர்மபுரியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி நேற்று நடந்தது.  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை போட்டித்தேர்வு எழுத தயார்படுத்துதல், பாடப்புத்தகங்களை கடந்து பொது அறிவை வளர்த்துக்கொள்ளுதல், தேர்வு எழுதும் ஆர்வத்தை அதிகரித்து தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, தர்மபுரி கல்வி மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை, மானியதஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவன் நடத்தினார்.  இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வினாடி-வினாவிற்கான, எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு இரண்டிலும் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கவுதம் கார்த்திகேயன், பாபுஜி, பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட அணி முதல் பரிசை பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும், 2ம் பரிசை மானியதஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 3ம் பரிசை அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றது. தர்மபுரியில் வரும் 26ம் தேதி மாவட்ட அளவிலான போட்டி நடக்கிறது.

Tags : Quiz Competition ,Government School Students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்