×

பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

போச்சம்பள்ளி, நவ.20: போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகளை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர்.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியதால் ஏரி, குளங்கள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை நிரம்பி கடல் போல் காட்சியளித்தது. அதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது. மேலும், நெடுங்கல் அணை நீர் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டதால் பாரூர் பெரிய ஏரி நிரம்பி போச்சம்பள்ளி கோணணூர் ஏரி வழியாக திருவயல், புளியம்பட்டி வழியாக பெனுகொண்டாபுரம் பெரிய ஏரி நிரம்பியது. அதனால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளம்கள் நிரம்பியது. நீர்நிலைகளில் நிரம்பியதால், இதை பயன்படுத்தி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தென்பெண்ணை ஆற்று படுகைகளில் தண்ணீர் செல்வதால் பல ஏரிகள், விவசாய கிணறுகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று பயிர்கள் செழித்து வருகிறது. போச்சம்பள்ளி தாலுகாவில் கடந்த 2 ஆண்டுகளில் பருவ மழை பொய்த்து போனதால் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் மா மரங்கள் காய்ந்து கருகியது. மேலும், பனை மரங்களும் வரலாறு காணாத அளவிற்கு காய்ந்தது. விவசாயிகள் அதை வெட்டி விறகாக விற்பனை செய்தனர். தற்போது பெய்த மழையால் 2 வருடங்களுக்கு பிறகு விவசாயிகள் பயிர்களை விதைத்து வருகின்றனர். போச்சம்பள்ளி தாலுகாவில் விவசாய பணிகளை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

Tags : Penukondaapuram ,lake ,
× RELATED மேட்டூர் அணையின் நீர் வரத்து...