பேளுக்குறிச்சி பழனியப்பர் கோயிலில் ₹1 கோடியில் திருப்பணி

சேந்தமங்கலம், நவ.20: பேளுக்குறிச்சி பழனியப்பர் கோயிலில் ₹1 கோடியில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சி அடுத்துள்ள கூவைமலையில் பழமையான பழனியப்பர் கோயில் உள்ளது. கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயில் சிவபெருமானால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. போகர் முனிவர் இக்கோயிலிலிருந்து தான் நவபாசன சிலைகள் செய்து பழனியில் நிறுவியதாகவும், இக்கோயில் வல்வில் ஓரி மன்னனால் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதாக கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் விநாயகர், பெருமாள் மற்றும் சிவபெருமான், அம்மன், நவகிரகம், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளது.  இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இக்கோயில் திருப்பணி செய்யப்படாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், கோயில் திருப்பணிக்காக ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பங்களிப்புடன் ₹1 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி பேளுக்குறிச்சி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: