×

டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை

கோவை, நவ. 20:  கோவை மாநகரில் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மண்டல அளவிலான அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த இடங்களில் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இனைந்து மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, விடுதிகள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் குறித்த தகவல் பெறப்பட்டு அவர்களின் இருப்பிடத்தை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு மாஸ் கிளினிங் செய்யப்பட்டு அந்த பகுதிகள் முழுவதும் மருந்து தெளிக்கப்படுகிறது,’’ என்றார்.Tags :
× RELATED பருவமழையை எதிர்கொள்ள தேவையான...