கால்டாக்சி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி.,யிடம் மனு

ஈரோடு, நவ. 20: ஈரோட்டில் கால்டாக்சி ஓட்டுநரை அடித்து உதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.  ஈரோடு பெரியசேமூர் நந்தவனத்தோட்டம் பகுதியை சம்சுதீன் மகன் நவாஸ் (20), சாதிக்பாட்ஷா மகன் ஆரோன் (17) ஆகியோர் கடந்த 15ம் தேதி சித்தோட்டில் இருந்து ஈரோடு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். நரிப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது, அந்த வழியாக வந்த கால்டாக்சி ஒன்று எதிர்பாராதவிதமாக நவாஸ், ஆரோன் வந்த பைக்கின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நவாஸ், ஆரோன் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய கால்டாக்சி டிரைவரான துரைராஜ் மற்றும் அவர் ஓட்டி வந்த காரையும் அடித்து உதைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாநகர தலைமை கால்டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தனர். அதில், கால்டாக்சி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீதும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இச்சம்பவத்தை கண்டித்து நரிப்பள்ளம் முதல் கனிராவுத்தர்குளம் வரை அமைதி பேரணியை வரும் 20ம் தேதி நடத்த உள்ளோம். அதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Related Stories: