புளியங்கோம்பையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சத்தியமங்கலம், நவ.20: புளியங்கோம்பையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பவானிஆற்றங்கரையோரம் ஐயப்பன் கோயில்  வீதியில் கழிவுநீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் அருகே சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் என எந்த கழிவுநீரையும் பவானி ஆற்றில் கலக்கக்கூடாது என பொதுமக்கள்  மற்றும் அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சென்னையில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் சத்தியமங்கலம் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, புளியங்கோம்பை சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஆண்டவர்நகர், புளியங்கோம்பை, மொண்டிகரடு, ஓட்டக்குட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் கணேசனிடம் புளியங்கோம்பையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என கோரிக்கை மனு அளித்தனர். இதில், திமுக நகர பொறுப்பாளர் ஜானகி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கிடுசாமி, முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>