பிளாஸ்டிக், சாக்கடை கழிவுகளால் புதர்மண்டி கிடக்கும் பேபி கால்வாய்

ஈரோடு, நவ.20: ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் சாக்கடை நீர் கலக்காமல் இருப்பதற்காக அதன் அருகிலேயே பேபி கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் பிளாஸ்டிக் மற்றும் சாக்கடை கழிவுநீரால் புதர்மண்டி காட்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கப்படுகிறது. பின்னர், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை பாசனத்திற்காக தண்ணீர் செல்கிறது.

இந்த காலிங்கராயன் வாய்க்காலில் சாய, சாக்கடை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் காலிங்கராயன் வாய்க்கால் அணைக்கட்டு பகுதியில் இருந்து வைராபாளையம் வரை வாய்க்காலில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டியே பேபி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர், இந்த பேபி கால்வாயில் சென்று வந்தது. ஆனால், கால்வாயை முறையாக பராமரிக்காத நிலையில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. மேலும், வாய்க்காலை ஓட்டி வசித்து வரும் குடியிருப்புகளில் இரவு நேரங்களில் பாம்புகள் படை எடுத்து வருவதாகவும், கொசுக்கடியாலும் அவதிப்படுவதாகவு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேபி கால்வாய் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காலிங்கராயன் வாய்க்காலை சீரமைக்க தண்ணீர் நிறுத்தும் காலங்களில் பேபி கால்வாயையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளாக இந்த பேபி கால்வாயை தூர்வாராத நிலையில் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதுதவிர, வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் நிரம்பி கிடக்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி வாய்க்காலை ஒட்டி வசித்து வரும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுகள் தேங்கி புதர்மண்டி காட்சியளிக்கும் பேபி கால்வாயை பொதுப்பணித்துறையினர் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: