×

கயத்தாறில் ஆபத்தான மின்பெட்டி மாற்றி அமைக்கப்படுமா?

கயத்தாறு நவ. 20: கயத்தாறில் வாகனங்கள் மோதியதில் சேதமடைந்து கவனிப்பாரின்றி திறந்துகிடக்கும் ஆபத்தான  மின்பெட்டி விரைவில் மாற்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். கயத்தாறில் இருந்து கடம்பூர், பசுவந்தனை,  எப்போதும்வென்றான் வழியாக தூத்துக்குடி வரை பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் கயத்தாறு காந்தாரியம்மன் கோயில் அருகே அபாயகரமான வளைவில்  அப்பகுதி தெருவிளக்குகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மின் கட்டுப்பாட்டு  பெட்டியுடன் கூடிய மின்கம்பம் சாலையோரத்தில் அமைந்துள்ளது. இரும்பாலான இந்த மின்கம்பம்  சாலையருகே தாழ்வாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் இருமுறை வாகனங்கள் மோதியதில் பலத்த  சேதமடைந்தது. வாகனங்கள் மோதியதில் பெட்டி மூடியின்றி திறந்தநிலையிலேயே அபாய கட்டத்தில் உள்ளது. பெட்டியிலுள்ள மின் வயர்களும் சேதமடைந்து காணப்படுவதால்  தற்போது மழை காலமாதலால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஊருக்கு  கிழக்கே அமைந்துள்ள கயத்தாறு கட்டபொம்மன் மேல்நிலை பள்ளிக்கு இந்த சாலை  வழியாகவே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் தினமும் கால்நடையாகவும்,  சைக்கிள்களிலும் சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக அதிகபடியான கனரக  வாகனங்களும், பேருந்துகளும் செல்கின்றபடியால் வாகனங்கள் கடந்து போகையில்  மாணவர்களும் பாதசாரிகளும் இந்த மின் பெட்டியின் அருகிலேயே ஒதுங்கி நிற்க  வேண்டியுள்ளது. பெட்டி திறந்த நிலையில் சேதமடைந்து உள்ளதால் அந்த  சமயங்களில் தடுமாறி பெட்டி மீது விழுந்தாலோ, தெரியாமல் கை பட்டாலோ விபத்து  ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கயத்தாறு மின் வாரியம்  முன்னெச்சரிக்கையாக உடனே துரித நடவடிக்கை எடுத்து புதிய பெட்டியை  மாற்றி  உயரமான இடத்தில் வைத்து விபத்து நிகழும் முன் தடுக்க வேண்டுமென்று  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு