தகுதியானோருக்கு இலவச வீட்டுமனை கோரி சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முற்றுகை

சாத்தான்குளம், நவ. 20: தகுதியானோருக்கு இலவச வீட்டு மனை வழங்கக்கோரி சாத்தான்குளம் தாலுகா  அலுவலகத்தை கலியன்விளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். சாத்தான்குளம் ஒன்றியம், அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலியன்விளை கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாத நிலையில்  வாடகை  வீடு மற்றும் நடைபாதைகளில் வசித்து  வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சிக்குள்பட்ட இடைச்சிவிளை பகுதியில் வெளியூர்களை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லையாம்.

 இதனால் ஆவேசமடைந்த கலியன்விளையை சேர்ந்த கிராம மக்கள்  50பேர், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்து திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை தாசில்தார் ராஜலட்சுமியிடம் அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கலியன்விளை, பூவன்விளை, உள்ளிட்ட 4கிராமங்கள் ஆதிதிராவிடர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் வீடு இல்லாத நிலையில் உள்ளவர்கள் வாடகை மற்றும் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். எனவே  வீடு இல்லாத தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், அனைவரும் தனித்தனியாக மனு வழங்குமாறும்,நேரிடையாக ஆய்வு நடத்தி வீடு இல்லாதவர்கள் கண்டறிந்து வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் அங்கிருந்து  கலைந்து  சென்றனர்.

Related Stories: