×

திருச்செந்தூரில் தொடரும் அவலம் மழை வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

திருச்செந்தூர், நவ. 20:  திருச்செந்தூரில் பாரதியார் தெருவில் பெய்த தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குடியிருப்புகள் மிதக்கும் அவலம் தொடர்கிறது. தேங்கிநிற்கும் மழை நீர் அகற்றப்படாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தாழ்வான இடங்களில் தாழ்வாக நிற்கிறது. இதே போல் 20வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெருவில் பெய்த தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குடியிருப்புகள்  மிதக்கும் அவலம் தொடர்கிறது. இவ்வாறு தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மழைநீர் பலநாட்களாக குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கிநிற்பதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதே போல் மாணவ, மாணவிகளும் பள்ளி செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில், கழிவுநீரும் கலப்பதால் அதில் உருவாகும் கொசுக்களால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நேரத்தில் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 எனவே, இனியாவது பேரூராட்சி நிர்வாகம் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்துவதோடு, வீதிகளில் வெள்ளம்போல் தேங்கிநிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.     உருக்குலைந்த சாலைகள்: இதனிடையே  கொட்டித் தீர்த்த கனமழையால் திருச்செந்தூரில் பல்வேறு சாலைகள் உருக்குலைந்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை காமராஜர் சாலை, மேல ரத வீதி, பரமன்குறிச்சி சாலைகள் மட்டுமின்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் பராமரிப்பின்றி பாழாகியுள்ளன.    இதையும் அதிகாரியும் கண்டும்காணாமல் இருந்து வருவதாக குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


Tags : Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...