×

மர்ம காய்ச்சல் எதிரொலி திசையன்விளையில் 200 பேர் துப்புரவு பணி

திசையன்விளை, நவ. 20:  திசையன்விளை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக பேரூராட்சி பணியாளர்கள் 200 பேர், ஒரே நாளில் அதிரடி துப்புரவு பணி மேற்கொண்டனர்.திசையன்விளை பகுதியில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மடச்சம்பாட்டில் ஒரே வீட்டில் இரு குழந்தைகள், மர்மகாய்ச்சலுக்கு அடுத்தடுத்து இறந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட செல்வமருதூரை சேர்ந்த மோனிஷா(3) என்ற சிறுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தாள். இதையடுத்து காய்ச்சலை பரவலை தடுக்கக் கோரி நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சுகாதாரம் மற்றும் பேரூராட்சி சார்பில் நேற்று டெங்கு நோய் தடுப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வடக்கு வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், களக்காடு மற்றும் நாங்குநேரி பேரூராட்சி செயல் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், டெங்கு பணியாளர்கள் 100 பேர், சுகாதார பணியாளர்கள் 100 பேர் என ஒரே நாளில் 200 பேர் திசையன்விளை பகுதியில் களமிறங்கினர்.  இவர்களுடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்கள் திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அப்புறப்படுத்தியதுடன், வாறுகால் துப்புரவு, கொசு மருந்து அடித்தல், வீடுகளில் டெங்கு கொசு உற்பத்திக்கான வாய்ப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து துப்புரவு பணிகளும் திசையன்விளை பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) சுப்பிரமணியன் மேற்பார்வையில் நடந்தது.


Tags : Mystery Flu Echo ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது