×

மாற்றுஇடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது

திருச்சி, நவ.19: திருச்சி கிராப்பட்டியில் சாலையோரம் வசிக்கும் 50 குடும்பங்களை நெடுஞ்சாலைத்துறை காலி செய்யச் சொன்னதால் மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்ககூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திருச்சி கிராப்பட்டி சாலையோரத்தில் வசிக்கும் 50 குடும்பத்தினர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:கிராப்பட்டி சாலையோரத்தில் 40 ஆண்டுகளுக்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிேறாம். தற்போது நெடுஞ்சாலை துறையினர் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும் வீடுகளை இடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மாற்று இடம் கொடுக்காமல் எங்களை திடீரென காலி செய்ய சொன்னால் குழந்தைகளுடன் எங்கு செல்வது. எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை இடிக்க கூடாது என கூறியுள்ளனர்.நாம் தமிழர் கட்சி மாநகர கிழக்கு மாவட்ட தொகுதி செயலாளர் விஜயகுமார் அப்பகுதி மக்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

டிவிஎஸ் டோல்கேட் அருகில் முடுக்குப்பட்டி பகுதி இக்பால் காலனியில் ஏற்கனவே ஒரு அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. அருகே பள்ளிவாசல், பாலநாகம்மாள் கோயில் உள்ளது. டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வருவோர் அங்கேயே சிறுநீர் கழிப்பது, அரை நிர்வாணமாக கிடப்பது என பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கடையை அகற்றாமல் மேற்கொண்டு புதிதாக ஒரு அரசு டாஸ்மாக் மதுபான கடை திறந்துள்ளனர்.  இரண்டு கடைகளையும் அகற்ற வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர். வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா சாகுல் அமீது அளித்த மனுவில், ‘அரியமங்கலம் உக்கடை, பள்ளிவாசல் தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு பாதையை ஆக்கிரமித்து ரைஸ் மில் உரிமையாளர் ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார். இதை அகற்றி, பொதுமக்களுக்கு உரிய பாதையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.பொதுப்பாதையில் கழிவுநீர் தொட்டி:கருமண்டபம் விஸ்வாஸ்நகர் விஸ்தரிப்பு, சோழகர்நகரை சேர்ந்த ராஜ்குமார் மகள் சத்யப்ரியா (5) என்ற சிறுமி அளித்த மனுவில், ‘நாங்கள் வசிக்கும் தெருவில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ள சிலர் கழிவுநீர் தொட்டி கட்டி உள்ளனர். அங்கேயே குளிப்பது, துணி துவைப்பது, கழிவுநீரை பாதையில் விடுவதால் பொது சுகாதாரம் கெடுகிறது. எனவே கழிவுநீர் தொட்டியை அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே இவர் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Homes ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை