குறைதீர் கூட்டத்தில் நத்தகளம் மீட்பு போராட்டகுழு மனு

திருச்சி, நவ.19: கீழகல்கண்டார்கோட்டை கிராமத்தில் நத்தகளத்தில் பாதாள சாக்கடை அமைவிடத்தை இடம் மாற்றாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று நத்தகளம் மீட்பு போராட்ட குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை நத்தக்களம் மீட்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் 63வது வார்டு திருவெறும்பூர் தாலுகா, கீழக்கல்கண்டார் கோட்டை கிராமம் சர்வே எண் 81ல் அடங்கிய ஹெக்டேர் 1.ஏர் 27.0 பரப்பளவு கொண்ட நத்தகளத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் தேக்கத் தொட்டி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. நத்தகளத்தை பயன்படுத்தும் சிறுகுறு விவசாயிகளின் நலன் கருதி இவ்விடத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுக்காததால் நத்தகளத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் அதிருப்தியடைந்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை பாகம் எண் 206, 207 ஆகிய வாக்குச்சாவடிகளை சேர்ந்த அனைத்து வாக்காளர்களும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம். இல்லம்தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என தீர்மானித்துள்ளோம். பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைவிடத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: