×

கலெக்டர் அலுவலகத்தை மமகவினர் முற்றுகை போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

திருச்சி, நவ.19: மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு அளிக்க அனுமதித்தனர். அவர்களுடன் வந்த குண்டூர், தென்றல்நகரை சேர்ந்த சுதாகர் மனைவி ராஜலட்சுமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் சுதாகர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பிற்பட்ட வகுப்பை சேர்ந்த நானும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எனது கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு 7 மணியளவில் வீட்டில் நாங்கள் உணவருந்தி கொண்டிருந்தபோது, திருவெறும்பூர் ஏஎஸ்பி பிரவீன் உமஷே் டோங்ரே, நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரன், எஸ்பி சிறப்பு குழுவை சேர்ந்த ராம்ஜிநகர் எஸ்ஐ செந்தில் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித வாரண்டுமின்றி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்தனர்.
 எனது கணவர் எங்கே எனக்கேட்டு எங்களை தாக்கினர். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனது மகளின் உணவு தட்டை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தனர். உன் புருஷன் கிடைக்கலன்னா அனைவரையும் தாக்குவோம் என்றனர். பின்னர் வீட்டின் மேஜையிலிருந்த 6 பவுன் தங்க செயினை எஸ்ஐ செந்தில் எடுத்து தனது சட்டை பையில் போட்டுக் கொண்டார். பீரோவை திறந்து துணிகளை களைத்தெறிந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் எங்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தினர். மேலும் எனது மாமனாரை அடித்து இழுத்துச் சென்று பொய் வழக்குப்போட்டுள்ளனர். என் கணவர் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Mamakavinar ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...