முருகனை திருச்சி கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்

திருச்சி, நவ.18: பெங்களூர் சிறையில் இருந்து அழைத்து வரப்படும் முருகனை இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பிரிவு போலீசார் கஷ்டடி கேட்டு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்.2ம் தேதி சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.முக்கிய குற்றவாளிகளான கனகவல்லியின் மகன் சுரேஷ் கடந்த அக்.9ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் அக்.11ம் தேதி பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். அன்றைய தினமே பெங்களூரு போலீசார் முருகனை கஸ்டடி எடுத்து தொடர்ச்சியாக விசாரித்தனர். மேலும் திருச்சிக்கும் அழைத்து வந்து ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். கடந்த 12ம் தேதி கஸ்டடி முடிந்த நிலையில் பெங்களூரு போலீசார் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் முருகனை கஸ்டடி எடுக்கும் நோக்கில் கோட்டை இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் பி.டி (பிரிசினர் டிரான்ஸ்பர்) வாரண்ட் பெற்று கொண்டு 12ம் தேதி பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் வழங்கினார். இந்தநிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக முருகனை திருச்சி போலீசார் அழைத்து சென்று விசாரிக்க நீதிபதி 17ம் தேதி அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முருகனை மீண்டும் பெங்களூரு 2வது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் செசன்சு கோர்ட்டின் உத்தரவு நகலை வழங்கினர். இதையடுத்து விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், முருகனை திருச்சி போலீசாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கடும் போலீஸ் பாதுகாப்புடன் முருகனை கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து திருச்சி ஜேஎம்1 கோர்ட்டில் இன்று அதிகாலை ஆஜர்படுத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து முருகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த கஷ்டடி கேட்டு கோட்டை போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories: