×

தேவாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், நவ. 19: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தேவாமங்கலம் கிராமத்தில் அட்மா திட்டம் சார்பில் விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்து நெல், உளுந்து, நிலக்கடலை பயிர்கள் சாகுபடியின்போது விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், மக்காச்சோள ராணுவ படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் நெற்பயிரில் நன்மை, தீமை செய்யும் பூச்சிகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பொருளாதார சேத நிலைகள் குறித்து விளக்கம் அளித்தார். மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள், உயிர் உரங்கள் பயன்படுத்துதல், கூட்டு பண்ணையம் குறித்து வேளாண் அலுவலர் சுப்ரமணியன் விளக்கினார். இதையடுத்து விவசாயிகளை அருகிலுள்ள நெல் சாகுபடி திடலுக்கு அழைத்து சென்று மண்ணில் ஈரப்பதத்தை கண்டறியும் ஈரப்பதமானி கருவி கொண்டு நீர் நிர்வாகம் மேற்கொண்டால் நீரை திறன்பட பயன்படுத்தி சேமித்து அதிக லாபம் பெறலாம். பூச்சி கட்டுப்பாட்டில் மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை, சோலார் விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறைகள் குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் விளக்கினார்.

இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு முறை மற்றும் பொருளாதார சேத நிலைகள் குறித்து நிலையத்தின் உழவியல் துறை தொழில் நுட்ப வல்லுநர் திருமலைவாசன் விளக்கினார். மேலும் நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ இடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.  மேலும் நிலக்கடலை ரிச், பயறு அதிசயம், மக்காச்சோள மேக்சிம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தெளித்தால் பயிர் வறட்சியை தாங்கி வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் என விளக்கினார். துறை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர் செல்வம் விளக்கினார். வயலில் பயிர் சாகுபடியின்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வருவாய் இழப்பின்றி அதிக மகசூல் பெறலாம் என்று வட்டார தொழில் நுட்ப மேலாளர் தெரிவித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...