×

தழுதாழை பகுதியில் ஆக்கிரமிப்பால் ஏரியை காணவில்லை

பெரம்பலூர், நவ. 19: தழுதாழை பகுதியில் ஆக்கிரமிப்பால் ஏரியை காணவில்லை. பொதுப்பணித்துறை வரைபடத்தில் கூட ஒழுங்குபடுத்தவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளில் இருந்து ஏரியை காப்பாற்றுங்கள் என்று பெரம்பலூரி–்ல் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் நூதன புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழை கிராமத்தினர் நடுத்தெரு செல்வராஜ் தலைமையில் மனு அளித்தனர். அதில் எங்கள் ஊரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ஏரி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் அறிந்த வகையில் 199 ஏக்கர் பரப் பளவில் இந்த ஏரி நிலம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது 100 ஏக்கருக்கும் குறைவாகவே இந்த ஏரி உள்ளது. ஏரிக்கான வரை படம் குறித்து பொதுப்பணித்துறையில் கேட்டும் கிடைக்கவில்லை. தழுதாழை கிராமத்தின் வரைபடத்தில் இந்த ஏரியின் வரைபடம் இல்லை. அதற்கு பதிலாக தனித்தனி சர்வே எண்கள் ஆகவே உள்ளது.

இதை இதுநாள்வரை பொதுப்பணித்துறை ஒருங்கிணைக்க வில்லை. மேலும் இதில் மனைகளாகவும், விளை நிலங்களாகவும், வீடுகளாகவும் ஆக்கிரமிப்பில் உள்ளது. மர சிற்ப தொழிலாளர் சேவை மையம் அமைப்பதற்கு மேற்கு ஏரிக்கரையில் 40 ஏக்கர் அளவிற்கு தண்ணீர் நிற்கும் பகுதியை அரசு அவர்களுக்காக ஒதுக்கி தந்துள்ளது. இதுகுறித்து ஆட்சேபணை தெரிவித்து ஏற்கனவே 2018 ஜூலை 9ஆம் தேதியன்று மனு கொடுத்த நிலையில் அந்த மையம் கட்டப்பட்டுள்ளது. தற்போது மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு அதே இடத்தில் இலவச குடியிருப்பு பட்டா வழங்கவுள்ளது. இந்த இடத்தில் பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். நீர்பிடிப்பு பகுதியில் குடியிருப்பு, பட்டா வழங்குதல், மரச்சிற்ப தொழிலாளர் சேவை மையம் வழங்கியது, ஆக்கிரமிப்பு நடப்பதற்கு காரணம். வரைபடம் இல்லாததும் முறையாக அளந்து வழங்காததும், 3 கரை இல்லாததும் ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. தழுதாழை ஏரியில் மட்டும் 100 ஏக்கர் பரப்பளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிகிறது. இதை சரி செய்து சீரமைத்து அளந்து தர வேண்டும். ஏற்கனவே பல முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே தழுதாழை ஏரியின் அளவை ஒழுங்கு முறைப்படுத்தி அளந்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு