×

அரை கம்பத்தில் கூட்டுறவு கொடி பறந்ததால் பரபரப்பு

தோகைமலை, நவ. 19: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சியில் உள்ள சந்தையூரில் தொண்டமாங்கிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. தோகைமலை-பாளையம் மெயின் ரோட்டில் கொசூர் கிழக்கு பகுதியில் உள்ள சந்தையூரில் செயல்பட்டு வரும் இந்த கூட்டுறவு சங்கத்தில் கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய 3 ஊராட்சி கிராமங்களில் உள்ள சுமார் 3500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு பதிவு பெற்ற விவசாயிகளுக்கு பயிர்கடன், நகை கடன், கால்நடை வளர்ப்பு கடன் உள்பட பல்வேறு கடன்களை வழங்கி வரவு செலவு செய்து வருகின்றனர். மேலும் 3 ஊராட்சிகளில் உள்ள வாழைக்கிணம், கவுண்டம்பட்டி, தொண்டமாங்கிணம், மத்தகிரி, கொசூர், கம்புளியாம்பட்டி, குப்பாண்டியூர், ஒட்டப்பட்டி ஆகிய 8 கிராமங்களில் நியாயவிலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் தங்களது சங்கத்தில் தொடர்ந்து கடன் பெறவும், பெற்ற கடன்களை முறையாக சங்கத்தில் செலுத்தி தொடர்ந்து பயன்பெறுதல், சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல விவசாயிகள் அளிக்கும் பங்களிப்புகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளை நிலைநிறுத்துவது தொடர்பாக கூட்டுறவு வார விழா கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் கூட்டுறவு சங்க கொடிஏற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர். தற்போது கடந்த 14ம் தேதி முதல் வருகின்ற 29ம் தேதி வரை 66வது கூட்டுறவு வாரவிழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டமாங்கிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் கொண்டாடி வரும் நிலையில் நேற்று சங்கத்தின் முன் அரை கம்பத்தில் சங்கத்தின் கொடி பறந்து கொண்டிருந்தது அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த சங்கத்தின் பணியாளர் இளஞ்சியம் அரைகம்பத்தில் பறந்து கொண்டிருந்த சங்கத்தின் கொடியை மீண்டும் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : cooperatives ,
× RELATED விவசாயிகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்