×

நூதன போராட்டம் நடத்திய முன்னாள் செயலாளர் கைது

தோகைமலை, நவ. 19: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி கருங்கல்பட்டி வடக்கு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம்(59). இவர் தொண்டமாங்கிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 13.1.1983ல் விற்பனையாளராக சேர்ந்து பணியாற்றி வந்து உள்ளார். நாளடைவில் பதவி உயர்வு பெற்று கடந்த 2013ம் ஆண்டு முதல் இக்கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பதவியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-2016ம் ஆண்டு தொண்டமாங்கிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்தபோது சங்கத்திற்கு அனுமதி பெறாத செலவினங்கள் மற்றும் நிதி இழப்பு செய்ததாக 2.9.2016 ல் சங்க செயலாளராக இருந்த பொன்னம்பலத்தை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.அதனை தொடர்ந்து 28.2.2018 ல் நிரந்தர பணி நீக்கம் செய்தனர். இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட பொன்னம்பலத்திற்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் பிழைப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பொன்னம்பலத்திற்கு வழங்கி வந்த பிழைப்பு ஊதியத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் தனக்கு பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்பட கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தும எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கு பிழைப்பு ஊதியம் வழங்காததால் வெறுப்பு அடைந்த பொன்னம்பலம் நேற்று கொசூர் சந்தையூரில் உள்ள தொண்டமாங்கிணம் தொடக்க வேளாண்மை சங்கத்தின் நுழைவு வாயில் அருகே தனது வாயில் கருப்பு துணி கட்டியும், நெற்றி மற்றும் உடல் பகுதியில் நாமம் இட்டு, கையில் பதாகை பிடித்து கொண்டு திருவோடு ஏந்தியவாறு நூதன போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது நூதன முறையில் போராட்டம் நடத்திய பொன்னம்பலத்தை கைது செய்து அவரிடம் இருந்து திருவோடு மற்றும் பதாகையை பறிமுதல் செய்தனர். பின்னர் மாலையில் அவரை விடுதலை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protest ,
× RELATED எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு