×

ராஜேந்திரம் ஊராட்சி வாலாந்தூரில் ரயில்வே பாதை வழியாக கடந்து செல்ல நடவடிக்கை

குளித்தலை, நவ. 19: ராஜேந்திரம் ஊராட்சி வாலாந்தூரில் ரயில்வே பாதையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாலாந்தூர் கிராம பொதுமக்கள் குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சி பகுதியில் உள்ளது வாலாந்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 300 குடும்பங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள் ஆவார்கள். இவர்கள் தினந்தோறும் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் வாலாந்தூர் கிராமத்திலிருந்து வயல் வழியாக குளித்தலை ரயில் நிலையம் வந்து தண்டவாளத்தை கடந்து தினந்தோறும் அப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமானோர் இந்த ரயில்வே லைனை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

மேலும் வாலாந்தூர் சுற்றியுள்ள கிராமங்களான பரளி, மயிலாடி, கல்லுப்பட்டி போன்ற கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக குளித்தலை நகருக்கு செல்வதற்கு வாலாந்தூர் வழியாக வந்து இந்த வந்து ரயில்வே வழிப்பாதையை நூறாண்டு காலமாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது ரயில்வே நிர்வாகம் மறு சீரமைப்பு பணி செய்து வருகிறது. வாலாந்தூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில் தண்டவாள வழிப்பாதையை சுவர் எழுப்பி அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் வாலாந்தூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் குகை வழிப்பாதை வேண்டி மத்திய அரசிடமும் ரயில்வே துறையினரிடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்து உள்ளது.

அதுவரையில் வாலாந்தூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் இந்த ரயில்வே பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் விவசாய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றி வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுத்து வாலாந்தூர் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை நடந்து செல்வதற்கு வழிவிட்டு சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இக் கோரிக்கை குறித்து கள ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags : Rajendram Panchayat ,railway line ,Walantur ,
× RELATED சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவையில்...