×

சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் தேர்வான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி

கரூர், நவ. 19: சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் கரூர் வட்டத்திற்குட்பட்ட 2757 பயனாளிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து வகையான நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் வகையில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டன. இதனடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் 35,327 மனுக்கள் பெறப்பட்டு அதில், 23939 மனுக்களுககு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 800 பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இன்று 2757 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.இந்த நிகழ்வில் எம்எல்ஏ கீதா, எஸ்பி பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், திட்ட இயக்குநர் கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் வளர்மதி, கரூர் நகராட்சி கமிஷனர் சுதா உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...