×

சுக்காலியூர் சாலைப்புதூர் வசந்தம் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

கரூர், நவ. 19: சுக்காலியூர் சாலைப்புதூர் வசந்தம் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுக்காலியூர் சாலைப்புதூர் வசந்தம்நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாக்கடை வசதியில்லை. தெருவிளக்குகள் இருந்தும் எரிவதில்லை. கோரிக்கை வைத்தும் பயனில்லை. அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மேல்நிலை தொட்டி ஆபரேட்டராக பணியாற்றிய 18 பேருக்கு பணிக்கொடை தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமுடிக்கவுண்டனூர் வையாபுரி அளித்த மனுவில் கூறியிருப்பது: தாந்தோணி ஒன்றியத்தில் 18 வருடங்களாக பணியாற்றியும் பணிக்கொடை வழங்கவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தீர்ப்பாயத்தில் முறையிட்டு பணிக்கொடை தொகை வழங்க 2017ம் ஆண்டில் உத்தரவிட்டும் இன்னமும் வழங்கவில்லை. இதனை சட்டப்படி வட்டியுடன் வழங்க ஆவன செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடவூர் சேவாப்பூர் பகுதி மக்கள் சார்பில் அளித்த மனுவில், கடவூர் பஞ்சாயத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வேலைக்கு செல்பவர்களும், கல்வி நிலையங்களுக்கு செல்பவர்களும் பேருந்துகளை நம்பியே உள்ளனர். 2 ஆண்டுகளாக போதிய பேருந்து வசதி செய்யவில்லை. ஒன்றிய அலுவலகம், மருத்துவமனை அரசு அலுவலகங்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். பள்ளபாளையம் திருக்காம்புலியூர், ராஜபுரம், தங்கசம்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில், மண்மங்கலம் தாலுகா பள்ளபாளையம் கிராமம் நத்தமேட்டில் அமைந்திருக்கும் பாக்குரம்மன்கோயிலில் குல தெய்வ வழிபாடு செய்து வரும் நிலையில் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து இடையூறு செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். நாகம்பள்ளி என்.வெங்கடாபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: அரசு மேல்நிலைப்பள்ளி 5 கிமீ தூரத்தில்உள்ளது. மிகுந்த சிரமத்துடன் பள்ளி செல்கின்றனர். காலை மாலை வெங்கடாபுரம் வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். முத்துக்கவுண்டம்பாளையம் வழியாகவும், நாகம் பள்ளி வழியாகவும் செல்லும் அரசு பேருந்தை எங்கள் பகுதி வழியாக வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Sukkaliyoor Roadputhur Vasantham ,
× RELATED கலெக்டர் தகவல் ரத்தினம் சாலையில்