×

ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்

தஞ்சை, நவ. 19: கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென கும்பகோணம், நாகை அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியது. தஞ்சை மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் கும்பகோணம், நாகை அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஓய்வூதியர்களின் நிலைமைகள், சம்மேளன முடிவுகள் குறித்து மாநில துணை தலைவர் துரை.மதிவாணன் பேசினார். கூட்டத்தில் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜூட்டி, வருங்கால வைப்பு நிதி தொகை, விடுப்பு சம்பளம், பென்சன் ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட ஓய்வுகால பணப்பலன்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கவில்லை. இதனால் பெரும் துன்பத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வுகால பணப்பலன்களை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும். 45 நாட்களில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட பழைய மற்றும் புதிய அகவிலைப்படியை நிலுவைத்தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும்.

2016ம் ஆண்டு வாரிசு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை பணி ஆணை வழங்கப்படாமல் காத்திருப்போருக்கு உடனடியாக பணி ஆணையை வழங்க வேண்டும். இதேபோல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓட்டுநர்- நடத்துனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட வாரிசுகளுக்கும் பணி நியமன ஆணை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், இறப்பு நல நிதி திட்டங்களை போக்குவரத்து ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க கவுரவ தலைவர் சந்திரமோகன், துணை தலைவர்கள் அழகிரி, சுப்பிரமணியன், துணை செயலாளர் மாணிக்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஞானசேகரன், குணசேகர், தியாகராஜன், கலியமூர்த்தி, பாதுகாவலர் பிரதிநிதி சாமிநாதன் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்