×

இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் பூஜை செய்ய சிவாச்சாரியார் விரைவில் நியமிக்கப்படுவாரா?

கும்பகோணம், நவ. 19: இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் சுவாமிக்கு பிரசாதம் தயாரிப்பவர் பூஜை செய்து வருகிறார். இதனால் சிவாச்சாரியாரை நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த இன்னம்பூரில் சுகுந்தகுந்தாளம்மன், நித்தியகல்யாண சமேத எழுத்தறிநாதர் கோயில் உள்ளது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். அகத்தியமுனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார் என்பதால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நெல், நாக்குகளில் முதல் எழுத்து எனும் அ எழுதுவர். பின்னர் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

கோயிலில் உள்ள சிவாச்சாரியார் பல்வேறு காரணங்களால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு விடுப்பு எடுத்தார். அதன்பின் உடல்நல குறைவால் மேலும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் இக்கோயில் நிர்வாகம் மாற்று சிவாச்சாரியாரை நியமனம் செய்யாததால் வேறு வழியில்லாமல் சுவாமிக்கு பிரசாதம் தயாரிப்பவரே மூலவருக்கு பூஜை செய்யும் நிலை உள்ளது. எனவே அறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக புகழ்பெற்ற இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலுக்கு மாற்று சிவாச்சாரியாரை நியமனம் செய்து மூலவருக்கு பூஜைகளை செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி கூறுகையில், பழமையான சிவன் கோயில்களில் ஆகம விதிமுறைகள் தெரிந்த, நியமத்துடன் வாழும் சிவாச்சாரியார்களே மூலவருக்கு பூஜைகள் செய்வர். இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் உள்ள சிவாச்சாரியார் விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் மாற்று சிவாச்சாரியார் ஒருவரை நியமனம் செய்யாமல் கோயிலின் ஆகம தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் பிரசாதம் தயாரிப்பவரை பூஜை செய்ய சொல்லியிருப்பது ஆகம விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இதுபோன்று பூஜைகள் செய்வதால் ஊருக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். எனவே இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் மாற்று சிவாச்சாரியாரை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

Tags : Shivacharya ,pooja ,
× RELATED கண்ணன்கோட்டை நீர்தேக்கம் திறப்பு: கலெக்டர் சிறப்பு பூஜை