×

வாலிபரை பிடித்த செயலாளருக்கு எஸ்பி பாராட்டு

மன்னார்குடி, நவ. 19: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் கீழத்தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அதே கிராமத்தை சேர்ந்த வேல்வண்ணன் (42) என்பவர் செயலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த 12 ம் தேதி காலை வேல்வண்ணன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளே இருந்துள்ளார். அப்போது ஒரு பெண் பணியாளரும் அங்கிருந்துள்ளார். அப்போது அருகில் இருந்த கடையில் டீ குடிப்பதற்காக வேல்வண்ணன் வெளியே வந்துள்ளார். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தை நோக்கி 3 பேர் இரண்டு பைக்கில் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் தனது பைக்கை தூரத்தில் நிறுத்தி விட்டு வங்கியை நோட்டமிட்டுள்ளான். வாலிபர்கள் தங்கள் பைக்கை வெளியே நிறுத்தி விட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு அலுவலகத்திற்குள் வந்தனர். அவர்களிடம் வேல்வண்ணன் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த அவர் பைக் சாவியை பிடுங்கி கொண்டு ஒருவரை மடக்கி பிடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு நபரும் ஏற்கனவே வெளியில் பைக்கோடு நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் பைக்கில் தப்பியோடி விட்டனர்.செயலாளர் வேல்வண்ணன் பிடிபட்ட நபரை அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து விட்டு மன்னார்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் எஸ்ஐ சிவகுகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதி யை சேர்ந்த நாகையன் மகன் பாபு (44) என்றும் தப்பியோடிய இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், நெடுவாக்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தில் கொள்ளையடிக்க நோட்டம் பார்க்க வந்ததும், மேலும் 3 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மன்னார்குடி போலீசார் பிடிபட்ட வாலிபர் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.  இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி துரை கொள்ளையனை தைரியமாக பிடித்து காவல் துறையில் ஒப்படைத்த வேல்வண்ணனை நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கிரைம் கூட்டத்தில் வைத்து பரிசு அளித்து பாராட்டினார். மேலும் இவ்வழக்கில் துரிதமாக நடவடிக்கை எடுத்த மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோரையும் எஸ்பி துரை பாராட்டினார்.

Tags : SP ,plaintiff ,
× RELATED காவலர் பணியிட மாறுதல்...