×

குளம்போல் தேங்கி கிடந்த கழிவுநீர் அகற்றம்

முத்துப்பேட்டை, நவ.19: முத்துப்பேட்டையில் குடியிருப்புகள் நடுவே குளம்போல் தேங்கி கிடந்த கழிவுநீர் தினகரன் செய்தி எதிரொலியாக பேரூராட்சி நடவடிக்கை எடுத்ததையடுத்து அகற்றப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 2-வது வார்டு ரஹ்மத்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ரஹ்மத்நகரில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், மழைநீர் ஆகியவை வடியும் வடிகால் ரயில்வே தண்டவாளம் துவங்கி திருத்துறைப்பூண்டி சாலையை கடந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வடிகாலில் சென்று அடைகிறது. இந்த வடிகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடி நெடுவெங்கும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும்.  கடந்த ஒருவாரமாக இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழையால் ரஹ்மத் நகர் முதல் சந்து (பெட்ரோல் பங்கு பின் புறம்) மற்றும் இரண்டாவது சந்தில் கழிவுநீரும் மழைநீரும் இரண்டொரு கலந்து தேங்கி கிடந்தது.

இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. அதேபோல் கழிவுநீர் நாற்றத்தால் அப்பகுதியில் மக்கள் குடியிருக்க முடியாமல் தவித்து வந்தனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த வடிகளில் உள்ள அடைப்பை சரி செய்தும், முதல் மற்றும் 2வது சந்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீரையும் வெளியேற்றி தூய்மை படுத்தி தரவேண்டும் என நேற்று (18ம்தேதி) தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ் அப்பகுதியில் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைத்து தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.உடனடியாக துப்புரவு பணியாளர்கள் நேற்று சம்பந்தப்பட்ட பகுதியை சீரமைத்து தேங்கிகிடந்த கழிவுநீரை வெளியேற்றி தூய்மை படுத்தினர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்