×

நேரடி விதைப்பில் மழைக்கால நெற்பயிர் மேலாண்மை பயிற்சி

மன்னார்குடி, நவ.19: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீடா வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் நேரடி நெல் விதைப்பில் மழைக்கால பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் பெருகவாழ்ந்தான் அருகே கீழக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் இராஜா ரமேஷ் கூறுகையில், மழைக் காலங்களில் நெற்பயிரானது தண்ணீரில் மூழ்குவதால் பிராணவாயு சரி வர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப் படுவதால் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் குறைந்துவிடும். மேலும் மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாக மற்றும் தாமிரச்சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்ளும் அளவு குறைந்து நெற்பயிரின் வளர்ச்சி தடைபடும். மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள சத்துக்கள் தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும்.

எனவே தண்ணீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ஒரு ஏக்ருக்கு 22 கிலோ யூரியா வுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும். அல்லது இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஒரு ஏக்ருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். அல்லது மணிச்சத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு ஏக்ருக்கு 4 கிலோ டி.ஏ.பி.யினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன்; 2 கிலோ பொட்டாஷ் உரத்தினையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், இந்தப் பயிற்சியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு பல்வேறு ரசாயன மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிப்பு, சுற்றுச்சுழல் மாசு பாடு, தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்கியது, தீமை செய்யும் பூச்சிகளின் எதிர்ப்பு தன்மை உண்டாவது மற்றும் நன்மை செய்யும் உயிரணுக்கள் பாதிப்படைந்தது உள்ளிட்டவைகளை எடுத்துரைத்து இயற்கை வழி பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டுமென எடுத்து கூறினார். அவற்றுள் முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் வெளியிடுதல், பூச்சிகளுக்கு நோய் கிருமிகளை உருவாக்கும் பிவேரியா பேசியாணா, மெட்டா ரைசி, அனிசோபிலியே போன்ற பூஞ்சாண மருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் வேம்பு போன்ற தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல், நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனஸ் போன்ற மருந்துகளைப் பயன் படுத்துதல் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை விரிவாக எடுத்து கூறினார்.

இந்தப் பயிற்சியில் இனக்கவர்ச்சிப்பொறி பயன்படுத்தும் முறைகள், ட்ரைக் கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி இலைச்சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்பூச்சிகளை அழிக்கும் முறைகள், மஞ்சள் மற்றும் ஊதா நிற ஒட்டும் அட்டை பொறிகளைப் பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், பச்சை தத்துப் பரபூச்சி மற்றும் புகையானின் தாக்குதலை குறைப்பது பற்றியும் செயல் விளங்கங்கள் விவசாயிகளின் வயல்களில் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில், வட்டார வேளாண்மை துணை அலுவலர் காத்தையன் வேளாண்மைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளி டம் எடுத்து கூறினார்.  நீடா வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிற்சி உதவியாளர் வனிதா அறுவடைக்கு பின் சார் தொழிற்நுட்பங்கள் குறித்தும் அரிசியில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு அதிக வருமானம் என்பதை எடுத்து கூறினார். தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க த்திற்காக விதைகள், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா, உயிர்எதிர் கொல்லி மருந்தான சூடோமோனஸ் உள்ளிட்டவை கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியாளர் சுரேஷ் மற்றும் திட்ட உதவியாளர் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Sowing ,
× RELATED நீடாமங்கலம் கீழப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம்