×

பராமரிப்பின்றி கிடக்கும் பொது சுகாதார வளாகம்

முத்துப்பேட்டை, நவ.19: முத்துப்பேட்டை பேரூராட்சி 1வது வார்டில் பராமரிப்பின்றி கிடக்கும் பொதுசுகாதாரவளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வலியுறுத்தி உள்ளனர். முத்துப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு மருதங்காவெளி அய்யாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மலம் கழிக்க அப்பகுதியை சேர்ந்த திறந்தவெளி இடங்களுக்கு செல்வதால் அவர்கள் வசதிக்காக பேரூராட்சி சார்பில் கடந்த 2012-13ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் ரூ.12லட்சம் நிதியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு குளிக்க மற்றும் மலம் கழிக்க, சிறுநீர் கழிக்க என்று தனித்தனி வசதிகள், அதே போன்று பெண்களுக்கு தனித்தனியாக சகல வசதிகளுடன் கட்டப்பட்டது. சென்றாண்டு வரை திறப்புவிழா நடைபெறாமலே கிடந்தது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கவனிக்காததால் போதிய பராமரிப்பு இல்லாமல் கட்டிடமும் அதன் உபகரணங்களும் வீணாகியது. பின்னர் மீண்டும் சமூக விரோதிகளால் உள்ளே உள்ள பாகங்கள், தடுப்பு சுவர்கள், மீட்டர் பாக்ஸ், மோட்டார், தண்ணீர் டேங்க் போன்றவைகள் உடைக்கப்பட்டது. இதனால் மக்கள் பயன்படுத்துவதையும் நிறுத்தினர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குடிமகன்கள் பராகவும், சீட்டு விளையாட கிளப்பாகவும் பயன்படுத்தி வந்தனர். இது குறித்து சென்றாண்டு தினகரனில் படத்துடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது. இதனையடுத்து கட்டிடம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. கஜா புயலின்போது கூட தண்ணீர், டேங்க் உள்ளிட்டவை சேதமாகியது. இதனையும் தினகரன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்ட பின்னர் புதிய தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.பொது சுகாதார வளாகத்தின் நிலை இப்படி மாறியதால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி திறந்தவெளி கழிப்பறையாக மாறியும் விட்டது.

இதன்மூலம் அங்கு மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப்பகுதியை சேர்ந்த பலருக்கு நோய்கள் பரவி அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.அதேபோல் இந்த சுகாதார வளாகத்தின் செப்டிக்டேங்க் தொட்டி பின் பகுதியில் உள்ளது. அதன் அருகே பள்ளமான பகுதி உள்ளதால் செப்டிக்டேங்க் கழிவு மற்றும் அப்பகுதியில் பெய்த மழைநீர் இரண்டொரு கலந்து கழிவுநீர் குட்டையாக மாறி கிடக்கிறது. இதனால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதே போல் இந்த சுகாதார வளாகத்திற்கு வரும் சாலையும் சேறும் சகதியுமாக மாறி கிடக்கிறது. அப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த அடிபைப்பும் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இதனை சீரமைத்து பணியாளர் நியமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பேரூராட்சியில் பலமுறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இனியும் நடவடிக்கை இல்லை என்றால் இப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு