×

சுகாதார சீர்கேட்டில் சிக்கிய காரைக்கால் பஸ் நிலையம்

காரைக்கால், நவ.19: அடிப்படை வசதிகள் இல்லாமல், துர்நாற்றம் மற்றும் அசுத்தமாக காணப்படும் காரைக்கால் பேருந்து நிலையத்தை உடனே நகராட்சின் நிர்வாகம் சீரமைக்கவேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்கோவில்பத்து பாரதியார் சாலையையொட்டி பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது. முக்கிய பேருந்து நிலையமான இங்குதான், நாகை, சீர்காழி, சிதம்பரம் புதுச்சேரி, சென்னை, தஞ்சை, திருச்சி, கோவை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் வந்து செல்கின்றனர். தினசரி ஏராளமான பயணிகள் இங்குதான் இறங்கி ஏறி செல்கின்றனர். ஆனால், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல போதுமான இடம் கிடையாது. பயணிகளுக்கான போதுமான இருக்கை கிடையாது. நல்ல குடிநீர் கிடையாது. போதுமான மின்விளக்கு வசதி இல்லை. இலவச கழிவறை கிடையாது. கட்டண கழிவறையோ முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அதன் கழிவு நீர் பொதுமக்கள் நடைபாதையில் வளிந்தோடுவதால் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு துர்நாற்றம். பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கென்று உடைமாற்றும் அறை, கழிவறை, ஓய்வறை கிடையாது. மாறாக, பேருந்து நிலையம் முழுவதும் குப்பைகூழங்கள்.

போதுமான சாக்கடை வசதி இல்லை. இருக்கின்ற சாக்கடைகள் சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. நுழைவு வாயில், சிக்னல் பகுதியில் முறையான வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால், மழை நீர் குளம் போல் தேங்கி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பாதாள சாக்கடை மீதா சிமெண்ட் பிளேட்டுகள் பெயர்ந்து, சாக்கடை நீர் சாலையில் ஓடும் அபாய மற்றும் அவல நிலையில் உள்ளது. திறந்தவெளி வாகன பார்க்கிங், பேருந்து நிலையம் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் ஆங்காங்கே பெயர்ந்து விழும் அவலநிலை. இப்படி பேருந்து நிலையத்தின் ஏ டூ இஜட் மோசமான நிலையில் இருப்பதால், நகராட்சி நிர்வாகத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து, சமூக ஆர்வலர் செல்வராஜ் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தின் ஒரேயொரு பேருந்து நிலையம் இதுதான். இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள கடைகள், கட்டண கழிவறை, ஆட்டோ ஸ்டாண்டு, இரு வாகன பார்கிங் பகுதி, உள்ளே நுழையும் பேருந்துகள் அனைத்திற்கும், நகராட்சி நிர்வாகம் தனித்தனியே ஆண்டுக்கு பல லட்சம் கட்டணம் வசூல் செய்துவருகிறது. இதன் மூலம் நகராட்சிக்கு ஏராளமான வருவாய் வரும் போது, பேருந்து நிலையத்தை குப்பைகூழமாக வைத்திருப்பது வேதனையான விசயம். காரைக்காலுக்கு வரும் ஏராளமான பயணிகள், பேருந்து நிலையத்தின் அவலநிலையை பார்த்து காறி உமிழ்ந்து செல்வது அதைவிட வேதனையாக உள்ளது. இதைவிட கொடுமை, கழிவறை, வாகன பார்க்கிங் பகுதிகளில் நகராட்சி குறிப்பிட்ட கட்டணத்தைவிட இரு மடங்கு அதிகம். இது குறித்து, பலர், பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தும், யாரும் கண்டுகொள்ளதாக தெரியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலையத்தை சீரமைப்பது அவசியம். என்றார்.
ஓடாத மணி கூண்டு. ஒளிராத மின்விளக்குகள்:

பேருந்து நிலையத்தின் மேலே பேருந்து நிலையம் தொடங்கிய காலத்தில் வைக்கப்பட்ட மணி கூண்டு, இன்றும் பெயர் அளவில் மட்டுமே உள்ளது. மணி இயங்கி பல ஆண்டுகள் ஆகிறது. பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள பல மின் விளக்குகள் எரிவதில்லை. அதனால், சமூக விரோதிகள் மது அருந்தவும், இன்னும் பிற சமூக குற்றஙக்ளை செய்யவும் ஏதுவாக உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, பேருந்து நிலையத்தின் உள்ளே, போலீஸ் பூத் என்ற பெயரில் ஒரு அறை இருந்தது. அதை சீரமைப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கபப்ட்டது. பல ஆண்டுகள் ஆகியும் அது சீரமைத்தபாடில்லை. அதன் விளைவு, அந்த அறை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி தருகிறது. அங்கு பணிக்கு வரும் காவலர்கள் சிறிது நேரம் அமர கூட இடமின்றி கடைகடையாக அலைந்துவருகின்றனர். இரவுநேர காவலர்களின் நிலை மிகவும் பரிதாபம்.

பேருந்து நிலையம் உள்ளே ஆட்டோ, இருசக்கர மற்றும் கார். வேன் வாகனங்கள் கட்டுபாடின்றி ஓடுவதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்தான் நடந்து செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் உள்ளே அடிக்கடி விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது. இது குறித்து புகாரின் பேரில் சில மாதம் காவலர்கள் நியமித்து பேருந்து நிலையம் உல்ளே ஆட்டோ, இருகக்ர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ காவலர்களின் அந்தப்பணி நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மீண்டும் காவலர்களை நியமித்து உள்ளே நுழையும் தனியார் வாகனங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Karaikal ,bus station ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...