×

நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது

நாகை, நவ.19: விழுப்புரம்-நாகை 4 வழி சாலை அமைய உள்ள நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.நாகூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சித்திக் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:விழுப்புரத்தில் இருந்து நாகை வரை தேசிய நெடுஞ்சாலை 45 ஏ என்ற பெயரில் 4 வழிச்சாலை அமையவுள்ளது. இந்த திட்டம் மக்களுக்கு பயன் தரும் திட்டம். ஆனால் 4 வழிச்சாலை போடுவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் நீர்நிலை பகுதிகளை எடுக்க உள்ளது.

நாகை மாவட்டம் ஏற்கனவே வறட்சியின் பிடியில் உள்ளது. இதனால் கடல் நீர் நாளுக்கு நாள் உட்புகுந்து வருகிறது. இந்த நேரத்தில் சாலை அமைப்பதற்காக நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் மழை பெய்யும் காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய் உள்ளது. இந்நிலையில் நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தை நோக்கி சென்று விடும். எனவே வேறு வழியின்றி நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் அதற்கு மாற்று ஏற்பாடாக குளம், குட்டை போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது