×

வெட்டிவேர் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குமா?

கொள்ளிடம், நவ.19: கொள்ளிடம் அருகே தில்லைமங்கலம் கிராமத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தில்லைமங்கலம் இக்கிராமம் வெட்டிவேருக்கு பெயர் போன கிராமம் ஆகும். இயற்கையிலேயே இந்த ஊரின் பெயர் திருபுவனவீரமங்கலம் ஆகும். தில்லைக்காளி இக்கிராமத்தில் பிறந்ததால் இக்கிராமத்திற்கு தில்லைமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் செவிவழி தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு பயிரிடப்படுகின்ற வெட்டிவேர் சிதம்பரம் (தில்லை) நடராஜபெருமானின் தலையில் சடையில் ஒவ்வொரு தரிசனத்தின் போதும், சிவனுக்கு உகந்த சிறப்பான விழாக்காலங்களிலும் இந்த வெட்டிவேர் தில்லைமங்கலத்திலிருந்து எடுத்துச் சென்று சூட்டப்படுவதால் இவ்வூருக்கு தில்லைமங்கலம் என்ற பெயர் உண்டானதாகக் கூறப்படுகிறது. வெட்டிவேர் வளர்வதற்கு ஏற்ற மண் ஏதோ சில இடங்களில் மட்டும் அரிதாகக் காணப்படுகிறது.

தண்ணீரை ஊற்றினால் உடனடியாக கரைந்து செல்லக்கூடிய வகையிலான மண்ணில் மட்டுமே வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. அத்தகைய மென்மையான மண் வெட்டிவேர் அபூர்வமாக தில்லைமங்கலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி ஒரு காலத்தில் அமோகமாக வளர்ந்தது. இங்கு பயிரிடப்படும் வெட்டிவேர் பல வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டது. சிதம்பரம், திருவண்ணாமலை, திருப்பதி, காஞ்சிபுரம், பழனி உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு தில்லைமங்கலத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் வெட்டிவேர் இறைவனுக்கு அணிவிக்கப்படுகிறது. இன்றும் பல ஆலயங்களுக்கு இங்கிருந்து வெட்டிவேர் சென்றுகொண்டிருக்கிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக்ககூடியது. வெட்டிவேர், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகவும் வெட்டி வெர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரை சுத்திகரிக்கவும் இந்த வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. பூக்களுக்கு மட்டுமே வாசனை உண்டு ஆனால் வெட்டிவேருக்கு அமைந்துள்ள இயற்கையான மனம் ரம்மியமானதாகவும் ஒரு காலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் தில்லைமங்கலத்தில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் வெட்டிவேர் சாகுபடி படிப்படியாக குறைந்தது. இன்று ஐந்து ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. அரசு எந்த நிதி உதவியோ மானியத்துடன் வங்கிக் கடனோ வெட்டிவேர் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதுநாள்வரை வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலைத்துறையில் கூட இந்த வெட்டிவேர் சேர்க்கவில்லை.

இதுவே தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி நலிவுற காரணமாகும். இது குறித்து தில்லைமங்கலம் கிராமத்தில் காலம் காலமாக தொடர்ந்து வெட்டி வேர் சாகுபடி செய்து வரும் பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், வெட்டிவேர் 90 நாள் பயிராகும். இப்பயிரில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடலைப் புண்ணாக்கு மட்டுமே எருவாகப் பயன்படுத்த வேண்டும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தக்கூடாது. பயிரிட்ட 60 ஆம் நாளிலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு செடியின் வேர் முட்டு என்றழைக்கப்படுகிறது. ஒரு முட்டு இரண்டு கிலோ வரை எடையிருக்கும் கால் ஏக்கர் வெட்டிவேர் பயிரிட 42 முதல் 45 ஆயிரம் வரை செலவு ஆகும். 60 நாட்களுக்குப் பிறகு கால் ஏக்கருக்கு ஒரு லட்சத்து ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். அரசு நிதி உதவி வழங்கினால் வெட்டிவேர் சாகுபடியை தொடர்ந்து செய்ய முடியும். வெட்டிவேர் லாபம் தரக்கூடிய பயிராகும். இந்தப் பயிரை அரசு இதுவரை தோட்டக்கலைத்துறையில் கூட சேர்க்காதது வேதனையாக உள்ளது.

அரசு நிதி உதவி செய்தால் தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி மீண்டும் சிறப்பாக நடைபெறும் தற்பொழுது பயிரிடப்படும் வெட்டிவேரை, வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். சில கம்பெனிகளிலிருந்து வாசனை திரவியம் மற்றும் மருந்து தயாரிக்க டன் கணக்கில் வெட்டிவேர் கேட்கின்றனர். பண வசதி இல்லாததால் அதிகம் பயிரிட முடியவில்லை. அரசு உதவி செய்தால் அல்லது மானியம் வழங்கினால் அதிகப்படியான வெட்டிவேர் சாகுபடி செய்யமுடியும். எனவே தில்லைமங்கலத்தில் நலிந்து வரும் வெட்டி வேர் சாகுபடியை அரசு ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் வெட்டிவேரை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...