×

மகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

ஓமலூர், நவ.19: ஓமலூரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஓமலூர் பகுதியில் சேலம் பார்த்திபன் எம்.பி. சுற்றுப்பயணம் செய்து, ஒவ்வொரு கிராமமாக சென்று குறைகளை கேட்டறிந்து, அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார். மத்திய அரசின் சார்பில், கிராமப்புற பெண்கள் தொழில் துவங்குவதற்கான மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், ஓமலூரில் பெண்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பார்த்திபன் எம்.பி. துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி மேலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு கடன் திட்டம், மானிய திட்டம், வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்கி கூறினார்.

 மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார், சேலம் தெற்கு ரயில்வே முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கர்(தளவாடம் பிரிவு) ஆகியோர் கலந்துகொண்டு, மத்திய அரசு பெண்கள் தொழில் தொடங்க கொண்டு வந்துள்ள நிதியுதவிகள், பயிற்சிகள், தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள், குறிப்பிட்ட சில தொழில்கள் துவங்க 100 சதவீதம் மானியம் வழங்குவது குறித்தும் தெரிவித்தனர். முகாமில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொண்டு நிறுவன பெண்கள், கிராமப்புற பெண்கள், படித்த மலைக்கிராம பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறு தொழில் துவங்குவதற்கான விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Tags : Women Entrepreneurship Awareness Camp ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது