×

350 பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்க அதிகாரிகள் தீவிரம்

நாமக்கல், நவ.19: நாமக்கல் மாவட்டத்தில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 350 பேருக்கு வீடு கட்டி கொடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வரும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டி கொடுக்கும் வகையில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை கடந்த 2016ல் மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 350 பேருக்கு வீடு கட்டி கொடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான பணியில் வட்டார வளர்ச்சில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், சொந்தமாக கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ₹2.10 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இதில் 60 சதவீதம் மத்திய அரசு அளிக்கிறது.

 இந்த திட்டத்தின் கீழ் பயனடையும்  நபரின் பெயரில் குறைந்தபட்சம் 269 சதுரஅடி நிலம் இருக்கவேண்டும். அந்த நிலத்தில் தான் வீடு கட்டி தரப்படும். இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 15 வட்டாரங்களில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தகுதியான பயனாளிகளை கண்டறிந்து அவர்களை வீடு கட்டிகொள்ளும் படி அறிவுறுத்தி வருகிறார்கள். இதில் பயனாளிகளை தேர்வு செய்தாலும், அவர்களை வீடு கட்டவைப்பது அலுவலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. உதாரணமாக கூரை வீடுகளில் வசிக்கும் வயதான நபர்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அணுகி சொந்த வீடு கட்டி கொள்ளும்படி அறிவுறுத்தினால், வயதான காலத்தில் வீடு கட்டி என்ன செய்யபோகிறோம். இருக்கிற காலம் வரை கூரையிலேயே வாழ்ந்துவிட்டு போகிறோம் என விரக்தியுடன் கூறுகிறார்கள்.

 ஆனால், ஆண்டுதோறும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட இலக்கை நாமக்கல் மாவட்டம் அடையவேண்டும் என்பதால், கலெக்டர் இந்த திட்டத்தை விரைவுபடுத்தும்படி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பிடிஓக்கள் தினமும், கிராமம், கிராமமாக சென்று பயனாளிகளை வீடு கட்ட சம்மதிக்க வைத்து வருகிறார்கள். இது குறித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2011ம் ஆண்டு சமூக பொருளாதார சாதி வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் வீடு இல்லாத நபர்கள், வறுமையில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற நபர்களுக்கு தான் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்குள் மாவட்டம் முழுவதும் 350 வீடுகள் கட்டும் பணி துவக்கப்படும். இதற்கான வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது,’ என்றனர்.

Tags : building houses ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை...