தொழிலாளி கொலையில் நண்பருக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி,  நவ. 19: கரசூரில் தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் அவரது நண்பருக்கு  ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   புதுவை, சேதராப்பட்டு அடுத்த கரசூர், மேட்டுத் தெருவில் வசிப்பவர் அய்யப்பன் (37). கூலி தொழிலாளியான இவர் தனது நண்பரான கரசூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவியை பற்றி தரக்குறைவாக பேசியதாக  தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் (34), கடந்த 2016  ஆகஸ்ட் 16ம் தேதியன்று சேதராப்பட்டு சாராயக்கடையில் நின்றிருந்த அய்யப்பனை  கடத்திச் சென்று அருகிலுள்ள தரையில் அய்யப்பனின் தலையை சரமாரி அடித்து கொலைசெய்தார். இதுதொடர்பாக அய்யப்பன் மனைவி விஜயா அளித்த புகாரின்பேரில்  சேதராப்பட்டு அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கொலை வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே  வந்த நிலையில், இந்த வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு  வருடமாக நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தனபால் நேற்று  இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றவாளி ஆறுமுகத்துக்கு ஆயுள்  தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதை  கட்டத்தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.  இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பெருமாள் ஆஜராகி வாதாடினார்.

Related Stories: