கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி திமுக விவசாய அணியினர் சாலை மறியல்

விக்கிரவாண்டி, நவ. 19: கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி திமுக விவசாய அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட திமுக செயலாளர் பொன்முடி எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.  விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி சார்பில் அரசு மற்றும் தனியார் ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய  தொகை மற்றும் நிலுவை உடனடியாக வழங்க கோரி ஆலை நிர்வாகத்தை கண்டித்து முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் புகழேந்தி, செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன் விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கரன் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வரங்கம்,  துணை அமைப்பாளர் பாபு ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ராஜா, ரவி துரை, நகர செயலாளர் நயினா முகமது, வானூர் திமுக ஒன்றிய செயலாளர் முரளி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலாளர் சங்கர், பிரதிநிதி ஒரத்தூர் வெங்கடேசன், இளைஞரணி பாலாஜி, வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகளுடன் பொன்முடி எம்எல்ஏ, அதிகாரிகளிடம் மனு கொடுக்க சென்றார். அப்போது அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அங்கு வராததால் அவர்களை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை  வலியுறுத்தும் வகையில் மத்திய மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி சார்பில் கரும்பு சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மனு கொடுக்க சென்றால் மாவட்ட அதிகாரி வரவில்லை. இதனை கண்டித்து  தாசில்தார் அல்லது மற்ற அதிகாரிகள் வரும் வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு வழங்கிய தொகையிலேயே அரசு தர வேண்டிய நிலுவைதொகை ரூ.600 கோடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ரூ.1600 கோடியளவில் நிலுவை தொகை பாக்கி வைத்துள்ளது.  முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை  43 கோடி ரூபாய், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெரியசெவலை சர்க்கரை ஆலையில் 21 கோடியும், கோமுகி ஆலையில் 5 கோடியும், மூங்கில்துறைப்பட்டு ஆலையில் 32 கோடியும் நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது.

இது சம்பந்தமாக சட்டசபையில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். திமுக தலைவரும் சட்டசபையில் பேசியுள்ளார். ஆனால் தொழில் துறை அமைச்சர் ஏற்பாடு செய்து தருவதாக கூறி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் தான் இந்த அமைச்சர்கள். எனவே அரசு ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்என்றார். சாலை மறியல் செய்த பொன்முடி எம்எல்ஏ உட்பட சுமார் 300 பேரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி சங்கர்  மற்றும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.  பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

Related Stories: