×

கடனை தள்ளுபடி செய்யக்கோரி இந்திராகாந்தி சிலை முன்பு மாற்றுத் திறனாளிகள் மறியல்

புதுச்சேரி,  நவ. 19: புதுவையில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய  வலியுறுத்தி இந்திரா காந்தி சிலை முன்பு மாற்றுத் திறனாளிகள் நேற்று  மறியலில் ஈடுபட்டனர்.  புதுவையில் அரசு  சார்பில் மாற்றுத் திறனாளி
களுக்கு வழங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை  தள்ளுபடி செய்யக்கோரி அனைத்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர உதவித் தொகையில் இருந்து கடனுக்கான வட்டி பிடித்தம்  செய்யப்பட்டதை கண்டித்து இந்திரா காந்தி சிலை அருகே நடுரோட்டில் 3 சக்கர  வண்டிகளுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர், விழுப்புரம்,  திண்டிவனம், புதுச்சேரி புதிய நிலையம் செல்லும் சாலைகளில் வாகனங்கள்  அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள்  மாற்றுப் பாதையில் செல்ல முயன்றாலும் அங்கு வாகனங்கள் தாறுமாறாக நின்றதால்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

 தகவலின்பேரில் வந்த  இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், (ரெட்டியார்பாளையம்), சண்முகம்,  (உருளையன்பேட்டை) தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்  திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட  மறுத்ததையடுத்து போலீஸ் வேனில் ஏற முடியாத 16 பெண்கள் உள்பட 40 பேரை கைது  செய்து வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்றி கோரிமேடு காவலர் சமுதாய  நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.  சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை  நடத்தி தீர்வு காணும் வரையில் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என  பிடிவாதமாக உள்ளனர். போலீசார் அவர்களுக்கு வழங்கிய மதிய உணவையும் சாப்பிட மறுத்துவிட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்து வருவதால் கோரிமேடு காவலர்  சமுதாய நலக்கூடத்தில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.




Tags : Indira Gandhi ,
× RELATED சட்டீஸ்கரில் மிசாவில்...