×

சிவாடியில் எண்ெணய் கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு

தர்மபுரி, நவ.19: தர்மபுரி அருகே சிவாடியில் எண்ணெய் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.  நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட சிவாடி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:  சிவாடி கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரமான 113 ஏக்கர் நிலங்களை, தனியார் எண்ணெய் நிறுவனம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரமே எங்கள் விவசாய நிலம் மட்டுமே. இதில் விளையும் பயிர்கள் மூலம் நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே, எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், எங்கள் பகுதியில் தனியார் எண்ணெய் கிடங்கு அமைப்பதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஏஐடியூசி கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் பணியாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களில் 7 பேருக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கிராம ஊராட்சிகளில் 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, அரசாணை இருந்தும் கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, நிலுவையில் உள்ள ஊதியம், காலமுறை ஊதியம் ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தர்மபுரி அருகே சோகத்தூரைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அன்னை சத்யா நகர் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலாளர்களான எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : oil warehouse ,
× RELATED ஒகேனக்கல் அருகே காட்டுயானைகள்...