மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

விருத்தாசலம், நவ. 19: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் ராமசாமி(30). இவருக்கும், சின்னசேலம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் ராஜா மகள் கவுசல்யா(22) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ராஜேஷ்(2) என்ற ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்று வருடம் கழித்து ராமசாமி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றுவிட்டார். அப்போது கவுசல்யாவை பற்றி தவறான தகவலை ராமசாமிக்கு அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த ராமசாமி உடனடியாக புறப்பட்டு கடந்த 29.9.2018 அன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த கவுசல்யாவை திட்டி தாக்கியதுடன், களையெடுக்கும் களைக்கட்டால் தலையில் அடித்து தாக்கியுள்ளார். அதில் மயக்கமான கவுசல்யாவின் தலையை சுவற்றில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கவுசல்யாவின் தந்தை செந்தில்ராஜா கொடுத்த புகாரின்பேரில் தொழுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் வாதாடி வந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ராமசாமி கவுசல்யாவை கொலை செய்தது உறுதியாகி குற்றம் நிரூபிக்கப்பட்டு ராமசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் ராமசாமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: