காரைக்காலில் பயங்கரம் தனியார் மதுக்கடை காவலாளி அடித்து கொலை

காரைக்கால், நவ. 19: புதுச்சேரி  மாநிலம், காரைக்கால் கீழவாஞ்சூர் பகுதியில் தனியார் மதுக்கடை இயங்கி  வருகிறது. இந்த மதுக்கடையில் நாகூர் அடுத்துள்ள பனங்குடி, தங்கமங்கலம்  காலனியை சேர்ந்த வடிவேல் மகன் விமல்ராஜ் (31) என்பவர் காவலாளியாக  வேலைபார்த்து வந்தார். இதே கடையில் காரைக்கால் நிரவி கள்ளர் தெருவை சேர்ந்த  உதயகுமார் மகன் மனோஜ் (26) கேஷியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில்  கடந்த 16ம் தேதி பணியில் இருந்த விமல்ராஜ் இரவு 11 மணியளவில் கடை மூடிய  பின்னர் கேஷியர் மனோஜிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். கணக்கு முடிக்காததால்  பணம் கொடுக்க முடியாது என கூறி அவர் விமல்ராஜை விரட்டியுள்ளார். இதில்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது,  மனோஜ் மற்றும் அங்கு வேலைபார்க்கும் அம்பகரத்தூர் தாமனாங்குடி மாதாகோயில்  ெதருவைச் சேர்ந்த செபஸ்தியான் மகன் அலெக்சாண்டர் (30), காரைக்கால்மேடு  பிள்ளையார்கோயில் ெதருவை சேர்ந்த கண்ணியன் மகன் கோபால் (40) ஆகிய 3 பேரும்  சேர்ந்து விறகு கட்டையால் விமல்ராஜ் தலை, முகம் ஆகியவற்றில் பலமாக தாக்கி  கடையோரம் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

ரத்த  காயத்துடன் மயங்கி கிடந்த விமல்ராஜ் மறுநாள் காலை 17ம் தேதி உறவினர் உதவியுடன் நாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உரிய  சிகிச்சை அளிக்காமல் டிடி ஊசி போட்டு விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.  அன்று மாலை விமல்ராஜ் உடல்நிலை மோசமடையவே அதே மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். பின்னர் அபாய கட்டத்தில் இருந்த விமல்ராஜை  மேல்சிகிச்சைக்காக நாகை அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே விமல்ராஜ் பரிதாபமாக  இறந்தார்.இதுகுறித்து அவரது சகோதரர் பக்கிரிசாமி கொடுத்த புகாரின்  பேரில் டி.ஆர்.பட்டினம் போலீசார் மனோஜ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

Related Stories: