கள்ளக்குறிச்சியில் முறைகேடாக வழங்கிய 5 கிராம உதவியாளர் பணி நியமன ஆணை ரத்து

கள்ளக்குறிச்சி, நவ. 19: கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியான மலைக்கோட்டாலம், வீரசோழபுரம், குரூபீடபுரம், உடையநாச்சி, குடியநல்லூர் ஆகிய 5 கிராமத்திற்கு கிராம உதவியாளர் பணி காலியிடத்தை நிரப்புவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்திட வேண்டி கடந்த 4 மாதத்திற்கு முன்பு அப்போதைய தாசில்தார் தயாளன் அறிவித்து இருந்தார். அதன்படி அந்தந்த கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. இதையடுத்து, 5 காலி பணியிடம் நிரப்புவதற்கு கள்ளக்குறிச்சி சார் ஆட்சியிர் ஸ்ரீகாந்திடம் அப்போதே அனுமதி பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. முறையான நேர்காணல் நடத்தி தேர்வு செய்யாத காரணத்தை சுட்டிக்காட்டி அப்போதே அந்த கடிதத்தை சார் ஆட்சியர் அனுமதி மறுத்து கையொப்பம் போடாமல் திருப்பி அனுப்பியுள்ளார்.    

 ஆனால் விண்ணப்பித்த நபர்களுக்கு முறையான பணி நியமனம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்த தாசில்தார் தயாளன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேதி அறிவித்த பிறகு அவசர அவசரமாக முன் தேதியிட்டு 18ம் தேதி பணி நியமனம் வழங்கியதுபோல் 20ம் தேதியே பணியில் சேர்ந்ததாக பதிவேட்டில் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. முறைகேடாக பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டதாக தகவல் அறிந்து முறையாக விண்ணப்பித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவிடம் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து பிரபு எம்எல்ஏ பாதிக்கப்பட்ட நபர்களுடன் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி முறையிட்டு தாசில்தார் தயாளன் முறைகேடாக ஒவ்வொரு நபரிடம் ரூ.10 லட்சம் பெற்று கொண்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். எனவே தாசில்தார் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார். இந்த புகார் கொடுக்கப்பட்ட அன்றே கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பணியிடம் மாறுதலாகி விழுப்புரம் மாவட்ட நில எடுப்பு தனிவட்டாட்சியராக தயாளன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கிராம உதவியாளர் பணி நியமனம் முறைகேடு குறித்து முறையான விசாரணையை துரிதப்படுத்தினார். அதில் பணி நியமன ஆணை வழங்கியதில் சில தவறுகள் நடந்துள்ளாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு சார் ஆட்சியர் பரிந்துரை செய்து ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தார். அதனையடுத்து 5 கிராம உதவியாளர் பணி நியமன ஆணை பெறப்பட்ட நபர்களை நேரில் அழைத்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பணி நியமனம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி முன்னாள் தாசில்தார் தயாளனை மாஜி மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, இருந்த நிலையில் இதற்கு உடந்தையாக செயல்பட்ட அப்போதைய கள்ளக்குறிச்சி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாண்டி மற்றும் அலுவலக ஏ3 பிரிவு உதவியாளர் தசரதன் ஆகியோருக்கு 17 பி மெமோ கொடுக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் முறைகேடாக கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்ட 5 நபர்களின் பணி ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி மாஜி கலெக்டர் சுப்ரமணியன் கடந்த 12ம் தேதி கடிதம் மூலம் கள்ளக்குறிச்சி சப்- கலெக்டருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி முறைகேடான முறையில் கிராம நிர்வாக உதவியாளர் பணி ஆணை பெறபட்ட மலைக்கோட்டாலம் பிரபு, குடியநல்லூர் சுகன்யா, குரூபீடபுரம் தனம், உடையநாச்சி கவிதா, வீரசோழபுரம் ராஜூவ்காந்தி ஆகிய 5 பேரின் பணி நியமன ஆணையை கடந்த 16ம் தேதி கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார். நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் ராஜசேகர் மேற்பார்வையில் பணி ஆணை ரத்து செய்யபட்டதற்கான நகல் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட 5 நபருக்கும் நேரில் வழங்கபட்டன. இந்நிலையில் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றம் செல்லாமல் இருக்க வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் கடந்த 3 நாட்களுக்கு  முன் ரகசியமாக 5 பேரிடம் எழுத்து பூர்வமாக கடிதம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. முறைகேடாக பணி ஆணை வழங்கிய விவகாரத்தில் முதல் முறையாக பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி வருவாய்த்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுள்ளது.  

 

இதுகுறித்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கூறுகையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் முறைகேடாக பணி நியமனம் ஆணை வழங்கிய விவகாரத்தில் தற்போது 5 நபர்களின் பணி ஆணை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. மேலும் புதியதாக தேர்வு செய்யப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேர்மையான முறையில் பணி ஆணை வழங்கிட வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு முன்மாதிரியாக இருக்கும் விதமாக முறைகேடாக பணி நியமனம் ஆணை வழங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அனைவரையும் நிரந்தர பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுசம்பந்தமாக வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்றார்.

Related Stories: