கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்படும் சட்டவிரோதமாக எது நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கள்ளக்குறிச்சி, நவ. 19: கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பி ஜெயச்சந்திரன் நேற்று மாலை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்டத்தின் முதல் எஸ்பியாக பதவியேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி கூறுகையில், தமிழக அரசு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கபட்டது. இதையடுத்து, என்னை இந்த மாவட்டத்தின் முதல் எஸ்பியாக தேர்வு செய்து நியமனம் செய்துள்ளனர். இன்று (நேற்று) எஸ்பியாக பதவியேற்று கொண்டேன். இதற்கு முன்னதாக மதுரை சிறப்பு பட்டாலின் எஸ்பியாக பணியாற்றியுள்ளேன். மேலும் 4 மாவட்டத்தில் எஸ்பியாகவும் பணியாற்றி உள்ளேன்.   கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் 3 கோட்டங்களை உள்ளடங்கியது. அதாவது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 கோட்டங்களும் 19 சட்ட ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் 3 போக்குவரத்து காவல்நிலையங்கள், 3 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 3 மதுவிலக்கு காவல்நிலையங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளடங்கியது.

பொதுஅமைதிக்கு எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்நிலையங்களில் சட்ட நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்படும். விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் என்னிடம் நேரில் புகார் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த காவல்நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை போக்குவரத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருட்டு சம்பவங்களை தடுப்பதில், முன்னுரிமை கொடுக்கப்படும். அதே நேரத்தில் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்படும். சட்டவிரோதமான முறையில் எது நடந்தாலும் அதனை தடுப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாவட்டத்திற்கு தேவையான காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட தற்காலிக எஸ்பி அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார். அப்போது டிஎஸ்பிகள் கள்ளக்குறிச்சி ராமநாதன், திருக்கோவிலூர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கு முன்னதாக டிஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் புதிய எஸ்பிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட காவல்துறைக்கு அலைவரிசை என் 23, 24, 25 ஆகியவை செயல்பட்டு வந்தது. நேற்று மாலை 5 மணி முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு என தனியாக இன்னாடு அலைவரிசை என் 24 ஒதுக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: