×

கடலூரில் பலத்த மழை சாலையில் குளம்போல் தேங்கிய தண்ணீர்

கடலூர், நவ. 19: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே வங்க கடலில் தென்கிழக்குப் பகுதியில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் கடந்த இரு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் நேற்று பகல் நேரத்திலும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலேசுவரர் கோயில் வளாகத்திற்குள் மழைநீர் குளம்போல் தேங்கியது.

மேலும் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம், லாரன்ஸ் சாலை, நேதாஜி சாலை, ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே சுரங்கப் பாதையில் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனத்தை ஓட்டினர். இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழைநீர் தேங்காமல் தடையின்றி ஓடுவதற்கு மழைநீர் வடிகால் கால்வாய்களில் குப்பை உள்ளிட்ட அடைப்பு இல்லாமல் இருப்பதற்கு வழி காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Cuddalore ,
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை